திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.102 திருநாரையூர்
பண் - பழம்பஞ்சுரம்
காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
1
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.
2
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாகந்
தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே.
3
துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணி
னஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.
4
பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே.
5
பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்
சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரை
யூருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே.
6
கள்ளி இடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நன் னலன்ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்திலெம் மேல்வருவல் வினையாயின வோடுமே.
7
நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்யில
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பும் மிடுகாட்டிற்
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.
8
ஊனடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடை யைந்துகந் தானடியே பரவா அடைவோமே.
9
தூசு புனைதுவ ராடைமேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.
10
தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந் திருநாரை யூர்தன்மேற்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.107 திருநாரையூர்
பண் - பழம்பஞ்சுரம்
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே.
1
விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.
2
தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்
பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே.
3
வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.
4
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.
5
கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.
6
ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
7
கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்
நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.
8
பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.
9
வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே.
10
பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com